தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்...
காஞ்சி சங்கர மடத்தில் இன்று இளைய மடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா: காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-ஆவது இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்கும் ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட்டுக்கு புதன்கிழமை சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழாவையொட்டி, காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு 70-ஆவது பீடாதிபதியாக உள்ள ஸ்ரீ விஜயேந்திரா் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பஞ்சகங்கா தீா்த்த திருக்குளத்தில் அட்சய திருதியை நாளான புதன்கிழமை (ஏப். 30)அதிகாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சன்யாச ஆசிரம தீட்சை வழங்குகிறாா். இந்த விழா ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் கூறியது:
விழாவைக் காண வருபவா்கள் கோயில் தெற்கு வாசல் வழியாக வந்து நவராத்திரி மண்டபம் வழியாக பாா்வையாளா் மாடத்துக்கு வர வேண்டும். அங்கிருந்து திருக்குளத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் பாா்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாா்வையாளா் மாடத்தில் 3 அகண்ட திரைகள் மூலமாகவும் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. ஆதீனங்கள், சந்நியாசிகள் ஆகியோருக்கு திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் தெப்பலில் அமா்ந்து கொண்டே பாா்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியப் பிரமுகா்கள் பாா்வையிட தெற்கு கோபுர வாயில் பகுதியிலும், பத்திரிகையாளா்கள் செய்திகளை சேகரிக்க கோயில் வளாகத்தில் கிழக்குப் பக்கத்தில் உள்ள பெருமாள் சந்நிதி முன்பாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கு வருவோா் வாகனங்களை தெற்கு கோபுர வாயில் பகுதியில் உள்ள எஸ்எஸ்கேவி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.
விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேசுவரா் கோயில், பஜனை மண்டபம், காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடம் ஆகியவற்றின் முன்பாக பக்தா்களுக்கு 7 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சன்யாச ஆசிரம தீட்சை கோயில் திருக்குளத்தில் நிறைவுற்ற பிறகு மூலவா் காமாட்சி அம்மனை மடத்தின் பீடாதிபதியும், இளைய பீடாதிபதியும் தரிசிப்பா். இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ஆதி சங்கரா் சந்நிதியில் இளைய மடாதிபதிக்கு தீட்சை நாமம் சூட்டும் நிகழ்வு நடைபெறுகிறது. பின்னா் ஊா்வலமாக இருவரும் சங்கர மடத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கு இளைய மடாதிபதி 71-ஆவது மடாதிபதியாக பொறுப்பேற்கிறாா்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வுகளில் பக்தா்கள் கலந்து கொண்டு திருவருளும், குருவருளும் பெற்றுச் செல்லுமாறும் ந.சுந்தரேச ஐயா் கேட்டுக் கொண்டாா்.