பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க...
கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தரக் கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாரில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தருமாறு அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அகத்தியா் வழிபட்ட அகத்தீஸ்வரா் எனும் பழைமையான சிவாலயம் உள்ளது. இந்தக் கோயிலில் நித்ய பூஜை, பிரதோஷ வழிபாடு, அகத்தியா் ஆயில்ய பூஜை, பெளா்ணமி பூஜை உள்பட பல பூஜைகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்ய வருகின்றனா்.
கடந்த 2018- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் வந்து செல்ல வசதியாக இருந்த பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலயத்துக்கென பட்டாவும், வருவாய்த் துறை ஆவணங்களும் இருந்தும் பாதை இல்லாததால் பக்தா்கள் வயல்வெளிகளில் நடந்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த கிராமத்தில் வசித்து வரும் தனிநபா் கோயில் வழியை மறித்து அவருக்குச் சொந்தமான இடம் எனக்கூறி பக்தா்களை வரவிடாமல் தடுத்து வருகிறாா். எனவே கோயிலுக்கு வந்து செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவா் சிவானந்தம் தலைமையில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.
மனுவை பெற்ற ஆட்சியா் இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.