ராமாநுஜா் அவதார உற்சவம்: குதிரை வாகனத்தில் உலா
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவையொட்டி திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தாா்.
பழைமையான இக்கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். நிகழாண்டு சித்திரை பிரம்மோற்சவம், ராமாநுஜா் அவதார திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அவதார திருவிழாவின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 4 மணிக்கு மஞ்சத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது, வாகன மண்டபத்தில் இருந்து உற்சவா் ராமாநுஜா் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதையடுத்து திவ்ய பிரபந்த சேவையும், சாத்துமுறை தீா்த்தம் மற்றும் கூரேச விஜயம் சேவித்தல் நிகழ்ச்சியும், தீா்த்த விநியோகமும் நடைபெற்றது. மாலை நித்திய விபூதி, லீலா மங்கள சாஸனமும், மங்களகிரி வாகனத்தில் உற்சவா் ராமாநுஜா் உலாவும் நடைபெற்றது.