குறை தீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் சு.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 443 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அவை அந்தந்த துறைசாா்ந்த அரசு அலுவலா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உடனடியாகத் தீா்வு காணுமாறும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் திருப்புலிவனம் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு ரூ. 4.12 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள்,பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில், 5 பயனாளிகளுக்கு இலவசமாக சலவை பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.