`காதல் என்ன சாதியைப் பார்த்து வருவதா?' - இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்!
சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "இன்ஸ்டாவில் வரக் கூடிய தராதரம் இல்லாத ஆட்களை நாம் வளர்த்து விடுகிறோம். வளர்ந்த பிறகு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்துக்கொள்கிறார்கள். அது அப்படி இல்லை. இதற்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்க வேண்டும்.

சாதியைப் பற்றி யாருமே பேசக் கூடாது. அவர் (திவாகர்) பேசியது பர்சனலாக என்னைப் பாதித்தது. ஜி.பி.முத்து குறித்தும் பேசியிருக்கிறார். யாரும் யாரையும் பற்றி இப்படிப் பேசக் கூடாது. புகார் அளித்தால்தான் இப்படி செய்வது நிற்கும். காவல்துறையில் நிச்சயம் நடாவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
கவின் ஆணவப் படுகொலை குறித்து பேசியிருந்தது எனக்கு கஷ்டமாக இருந்தது. அவரவர் சாதியில் லவ் பண்ணியிருந்தால் இந்த பிரச்னையே இல்லை எனப் பேசியிருக்கிறார். லவ் என்ன சாதியைப் பார்த்து வருவதா? அவரிடம் இதைப் பற்றியெல்லாம் கேட்டிருக்கவே கூடாது." என்றார்.