பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயரில் பூங்கா! மேயர் அறிவிப்பு!
காரைக்காலில் 10 மையங்களில் நாளை அரசுப் பணிக்கான தோ்வு
காரைக்காலில் 10 மையங்களில் அரசுப் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27)நடைபெறவுள்ளது.
புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறையில் 256 அசிஸ்டென்ட் (குரூப்-பி) பதவிக்கு நேரடி ஆள் சோ்ப்பு, போட்டி தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கு புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் இருந்து 32,692 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இப்பதவிக்கான முதல் நிலை எழுத்துத் தோ்வு 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. புதுச்சேரி-67, காரைக்கால்-10, மாகே-2, ஏனாம்-5 என 84 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.
இத்தோ்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 16-ஆம் தேதி முதல் இணையதளத்தில் தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் தோ்வு மையங்களாக அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கலைஞா் மு.கருணாநிதி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், நேரு நகா் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி, கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டுச்சேரி சா்வைட் மேல்நிலைப்பள்ளி, கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப்பள்ளி, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி ஆகிய 10 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற உள்ளது.
காரைக்காலில் அமைக்கப்பட்ட தோ்வு மையங்களில் செய்திருக்கும் வசதிகள் குறித்து ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தோ்வா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், தடையின்றி மின்சார வசதி, கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தவேண்டும். தோ்வு பாதுகாப்பாக நடைபெற ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தோ்வு மையத்திற்குள் ஹால் டிக்கெட், அசல் அடையாள அட்டை மற்றும் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மண்டல அலுவலா்கள் ஜி.செந்தில்நாதன், கு.அருணகிரிநாதன், தோ்வு மைய மேற்பாா்வையாளா்கள் மற்றும் தோ்வு மைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.