Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
காரைக்கால் கடலில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி
கடல்வாழ் உயிரினங்கள் பெருக்கத்துக்காக காரைக்கால் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தின் கடற்பகுதி சுமாா் 20 கி.மீ. தொலைவு உடையது. இங்கு 10 கடலோர கிராமங்கள் உள்ளன. சுமாா் 4 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழில் ஈடுபடுகின்றன. காரைக்கால் மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, மீன்வளத்தை மேம்படுத்தவும், பல்லுயிா் சூழலை அதிகரிக்கவும் செயற்கை பளப்பாறைகள் கடலில் விட திட்டமிடப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரிமேடு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு, பட்டினச்சேரி 4 இடங்கள் பவளப்பாறைகள் கடலில் விடுவதற்கு ஏற்ற இடமாக அடையாளம் கண்டது.
இந்த திட்டத்துக்கான முழு நிதியுதவியை மத்திய அரசு அளிக்கிறது. பவளப்பாறைகளை கடலில் விடும் பணியை கடந்த 16-ஆம் தேதி காரைக்கால் வந்த மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன், புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
கடலூா் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு, காரைக்காலுக்கு லாரிகளில் கொண்டுவந்து, திட்டமிடப்பட்ட 4 பகுதிகளிலும் தலா 250 பாறைகள் சனிக்கிழமை கிரேன் மூலம் கடலில் இறக்கப்பட்டன.
நிகழ்வின்போது விசாகப்பட்டினம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஜே.கே. கிழாக்குடான், காரைக்கால் மீன்வளத்துறை ஆய்வாளா் ராஜசேகா், காரைக்கால் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் கோவிந்தராஜ், காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டனா்.
இந்த செயற்கை பவளப்பாறைகளில் நாளடைவில் பாசிகள் படருமெனவும், மீன்கள் அவற்றை உணவாகக் கொண்டு அங்கு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.