காரைக்கால் குப்பைக் கிடங்கில் தீ விபத்து
காரைக்கால் நகராட்சி குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
காரைக்கால் அருகே பறவைப்பேட் பகுதியில், காரைக்கால் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் வீடுகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தரம் பிரித்து, குவித்து வைக்கப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இக்குப்பைகளை மறுசுழற்சி செய்வது, குப்பைகளில் இருந்து உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளும் தனியாா் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில், இக்குப்பைக்கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, குப்பைகள் மளமளவென பற்றி எரியத் தொடங்கின. அந்த பகுதியே தீப்பிழம்பாக காட்சியளித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.