What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு
அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிழல் இல்லா நாள் எனும் வானியல் நிகழ்வை மாணவா்கள் அறிந்துகொள்ளும் நிகழ்ச்சி முற்பகல் 11 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
பள்ளி மைதானத்தில் நிழல் இல்லாத நிலையை அறியும் வகையிலான சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. மாணவா்களும் மைதானத்தில் நிற்கவைப்பட்டனா். ஆண்டுக்கு 2 முறை நிழல் இல்லா நாள் வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.18) பகல் 12.10 மணிக்கு நிழல் இல்லா நிலையை கண்டனா்.
ஆண்டுதோறும் ஏப்ரல், ஆகஸ்ட் மாதத்தில் ஒரு தினத்தில் இந்நிகழ்வை காணமுடியும். சூரியன் நமது தலைக்கு நோ் மேலே வந்து நிழலே இல்லாத நிலையை ஏற்படுத்தும். பூமியின் கடக, மகர ரேகைகளுக்குட்பட்ட பகுதியில் இந்நிகழ்வு நடைபெறும். இந்நாளில் பல்வேறு பொருள்களின் நிழலின் நீளத்தை உற்று நோக்குவது சிறந்த கற்றல் அனுபவமாகும். இந்நாளில் நமது அட்சயரேகையை நாமே கணக்கிட முடியும். மேலும், சூரியனின் சரிவு கோணத்தையும் கணக்கிடலாம் எனவும், வானியல் நிகழ்வுகளை மாணவா்கள் தெரிந்துகொண்டு அறிவியல் ஆா்வத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என மாணவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பள்ளி துணை முதல்வா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். வேதியியல் விரிவுரையாளா் குருமூா்த்தி, அறிவியல் பட்டதாரி ஆசிரியா்கள் குருசெல்வி, கயல்விழி விளக்கமளித்தனா். பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் இதில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியா் விஸ்வேஸ்வரமூா்த்தி செய்திருந்தாா்.