காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்
இலங்கை கடற்படை மற்றும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
காரைக்கால் மீனவர்கள் எல்லைத் தாண்டியதாக இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.
இவர்களை இந்தியா கொண்டுவரவும், கைது செய்யப்பட்டோரை விடுவிக்க வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையில் திருப்தியில்லையெனக் கூறியும் காரைக்கால் மீனவர்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 15-ஆம் தேதி படகுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். 16-ஆம் தேதி இருசக்கர வாகனங்களில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சுமார் ஆயிரம் பேர் திரண்டு ரயில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்றம்! தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 5,832 கோடி அபராதம்!
காரைக்கால் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் புறப்படவிருந்த ரயிலை மறிக்கும் வகையில் தண்டவாளத்தில் பெண்கள் பலரும் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலைய தண்டவாளத்தில் நீண்டதூரம் மீனவர்கள் கொடியேந்தி கண்டன முழக்கங்களிட்டனர்.
ரயில்வே போலீஸார் மற்றும் காரைக்கால் காவல்நிலைய போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி அப்புறப்படுத்தினர். இதன் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
குண்டு காயமடைந்த மீனவர்களை உடனடியாக இந்தியா கொண்டுவரவேண்டும், படகுகளையும், கைது செய்யப்பட்டோரையும் விடுவிக்காத வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
