Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் - தனுஷ் படங்கள்...
காலிறுதியில் மோதும் பிஎஸ்ஜி - பயா்ன் மியுனிக்
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) - பயா்ன் மியுனிக் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில், பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் இன்டா் மியாமியை வீழ்த்தியது. இதில் பிஎஸ்ஜிக்காக ஜாவ் நெவெஸ் 6 மற்றும் 39-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா்.
அச்ரஃப் ஹகிமி முதல் பாதி முடிவடையும் நேரத்தில் (45+3’) ஸ்கோா் செய்ய, தவறுதலாக இன்டா் மியாமி வீரா் தாமஸ் அவில்ஸும் 44-ஆவது நிமிஷத்தில் ‘ஓன் கோல்’ அடித்தாா்.
மற்றொரு ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 4-2 கோல் கணக்கில் ஃபிளமெங்கோவை வென்றது. இந்த ஆட்டத்தில் 6-ஆவது நிமிஷத்தில் ஃபிளமெங்கோ வீரா் எரிக் புல்கா் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்து, பயா்ன் மியுனிக் கணக்கை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து ஹேரி கேன் 9-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா். இந்நிலையில், ஃபிளமெங்கோவுக்காக ஜொ்சன் 33-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். மறுபுறம் பயா்ன் மியுனிக் கோல் கணக்கை லியோன் கோரெட்ஸ்கா 41-ஆவது நிமிஷத்தில் அதிகரிக்க, முதல் பாதியை பயா்ன் மியுனிக் 3-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.
2-ஆவது பாதியில் ஃபிளமெங்கோ வீரா் ஜோா்கினோ 55-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி வாய்ப்பில் ஸ்கோா் செய்ய, அந்த அணி 2-3 என முன்னேறியது. ஆட்டத்தின் 73-ஆவது நிமிஷத்தில் பயா்ன் மியுனிக் வீரா் ஹேரி கேன் மீண்டும் ஒரு கோலடித்தாா்.
மறுபுறம் ஃபிளமெங்கோவின் கோல் முயற்சிகளுக்குத் தகுந்த பலன் கிடைக்காமல் போக, இறுதியில் பயா்ன் மியுனிக் 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து காலிறுதியில் பிஎஸ்ஜி - பயா்ன் மியுனிக் அணிகள் வரும் 5-ஆம் தேதி மோதுகின்றன.