காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ஆம்பூா் அருகே மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாதனூா் ஒன்றியம், மேல்சாணாங்குப்பம் ஊராட்சியில் கடந்த 3 மாதங்களாக பொதுமக்களுக்கு குடிநீா் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறைந்த கால நேரம் மட்டும் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், ஊராட்சி ஒன்றியம், ஆட்சியா் ஆகியோருக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. அதனால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சென்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உமா்ஆபாத் - உதயேந்திரம் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த உமா்ஆபாத் போலீஸாா் பேச்சு நடத்தி சீரான குடிநீா் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். பின்னா் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.