காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தால் ஏற்பட்ட பயன்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மொத்தம் 30,992 பள்ளிகளில் 18.50 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து, ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் அடுத்தடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஏற்பட்ட பயன்கள் குறித்து தமிழக அரசு நடத்திய ஆய்வின் முடிவுகளை அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா வெளியிட்டார்.
செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளது. தாமதமின்றி சரியான நேரத்தில் நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்கள், சோர்வின்றி பாடத்தை கவனித்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள்.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. பள்ளிகளில் ஆரோக்கியமான காய்கறி உணவு வழங்கப்படுவதால், வீட்டிலும் அதுபோன்ற ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களின் வேலைப் பளு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் கை கழுவி சாப்பிடும் பழக்கமும் மாணவர்களிடம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவின் அளவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் திருப்தி தெரிவித்துள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காலை உணவுத் திட்டத்தின் 5 ஆம் கட்டத்தை சென்னை மயிலாப்பூரில் நாளை காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 2,429 பள்ளிகளைச் சேர்ந்த 3.06 லட்சம் குழந்தைகள் பயன்பெறவுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.