கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
கால்நடை மருத்துவ படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் அடுத்த வாரம் வெளியீடு
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் 25,544 மாணவா்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அவை பரிசீலிக்கப்பட்டு அடுத்த வாரம் தரவரிசைப் பட்டியல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு பிவிஎஸ்சி ஏஹெச் 660 இடங்கள் இருக்கின்றன.
திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு (பி.டெக்.) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு (பி.டெக்.) 20 இடங்கள் இருக்கின்றன.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்.) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக். படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
பிவிஎஸ்சி ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு https://adm.tanuvas.ac.in/ இணையதளத்தில் கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.
பிவிஎஸ்சி ஏஹெச் படிப்புக்கு 20,516 பேரும், பி.டெக். படிப்புகளுக்கு 5,028 பேரும் என மொத்தம் 25,544 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வாரம் தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.