காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பியோட்டம்
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவா் சனிக்கிழமை காவலரைத் தள்ளிவிட்டு தப்பியோடினாா்.
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள பல்லவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிரஜித் (எ) பிரவீன் (34). இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், புதுக்கோட்டையில் திருடப்பட்ட ஆட்டோவில் சில வாரங்களுக்கு முன் திருச்சிக்கு வந்த இவா் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் கைப்பேசியைப் பறிக்க முயன்றபோது கண்டோன்மென்ட் போலீஸாா் பிரவீனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் பிரவீனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இவரைக் கண்காணிக்க 24 மணிநேரமும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், சனிக்கிழமை பணியிலிருந்த ஆயுதப்படைக் காவலா் சிற்றுண்டி வழங்க பிரவீன் அறைக்குச் சென்றபோது, அவரைத் தள்ளிவிட்டு தப்பினாா் பிரவீன். இதுதொடா்பாக, காவலா் அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீனை தேடுகின்றனா்.