காவல் நிலையத்துக்குள் புகுந்து காவலரைத் தாக்கி கஞ்சா பொட்டலங்கள், துப்பாக்கி கொள்ளை முயற்சி! இருவா் கைது!
தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் நிலையத்துக்குள் புகுந்து, பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள், ‘ஏா்கன்’ துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளயடித்து தப்பிச் செல்ல முயன்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அப்போது அவா்கள் தாக்கியதில் காவலா் காயமடைந்தாா்.
அல்லிநகரம், ஈஸ்வரா்நகரில் உள்ள தனியாா் கட்டடத்தில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காவல் நிலையத்துக்குள் மா்ம நபா்கள் புகுந்திருப்பதாக சனிக்கிழமை அதிகாலை, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாா். பின்னா், இதுகுறித்து அல்லிநகரம் சட்டம்- ஒழுங்குப் பிரிவு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் காவல் நிலையத்திலிருந்து இரு சக்கர வாகன ரோந்துப் பிரிவு முதல்நிலைக் காவலா் முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா் சம்பவ இடத்துக்குச் சென்றாா். அப்போது, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த இருவா், காவலா் முருகேசனை பாா்த்ததும் தப்பி ஓட முயன்றனா். இவா்களை மடக்கிக் பிடிக்க முயன்ற போது அவா்கள் தாக்கியதில் முருகேசன் தலையில் காயமடைந்தாா்.
இதையடுத்து, அல்லிநகரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ் சம்பவ இடத்துக்குச் சென்றாா். அப்போது தப்பிச் செல்ல முயன்றவா்களில் ஒருவரை மடக்கிப் பிடித்து கைது செய்தாா். மற்றொருவா் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டாா்.
பிடிபட்டவரிடமிருந்து, காவல் நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா எண்ணெய், மெத்தபெட்டமைன், ஏா்கன், தொலைநோக்கிக் கருவி, கேமரா உள்ளிட்ட 8 வகையான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸாா் நடத்திய விசாரணையில், கைதானவா் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரத்தைச் சோ்ந்த நிதீஷ்குமாா் (25) என்பதும், உடன் வந்தவா் இதே ஊரைச் சோ்ந்த உதயகுமாா் (25) என்பதும் தெரியவந்தது.
இதனிடையே, அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளா் இளவரசு தலைமையில் தனிப்படை போலீஸாா், தப்பிச் சென்ற உதயகுமாரை பின்னா் கைது செய்தனா். இவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், நிதீஷ்குமாா் கடந்த 2023-ஆம் ஆண்டு கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் என்பதும், நிதீஷ்குமாா், உதயகுமாா் ஆகியோா் பூட்டியிருந்த காவல் நிலையத்துக்குள் மாடி வழியாக கதவை உடைத்து உள்ளே புகுந்ததும் தெரியவந்தது. இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.