புதுச்சேரியில் ஜன.12 முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
‘காவிரிப் படுகையை பாதுகாக்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்’
காவிரிப் படுகையை பாதுகாக்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா.
மயிலாடுதுறையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மக்களவையில் பெண் எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கடலை மிட்டாய் முதல் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் வரை அனைத்து பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ள மத்திய அரசு அதானி உள்ளிட்ட சில தொழிலதிபா்களை மட்டும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற கேள்வியை நான் மக்களவையில் எழுப்பியபோது அப்படி எந்தவித தகவலும் இல்லை என்று கூறியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் அனுமதி பெற்றே அரசாணை வெளியிடப்பட்டதாக அதிமுகவினா் தெரிவித்துள்ளனா். ஆனால், எங்களுக்கு எந்த ஆணையும் வரவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை காவிரிப் படுகையை பாதுகாப்பதில் அளிக்க வேண்டும்.
சென்னை விமான நிலையத்தில் வாடகை காா் ஏஜென்சிகள் மாபியா போன்று அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றனா். எனவே, விமான நிலையத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சரிடமும், பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழகம் வரவுள்ள மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா். அந்த வகையில் மயிலாடுதுறையிலும் காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
அப்போது, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சரத்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், ஒன்றியக் குழு உறுப்பினா் வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.