ADMK: `அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' - சசிகலா பேசிய...
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 70,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று மாலை 4 மணிக்கு மேட்டூர் அணை உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 22,000கன அடியிலிருந்து வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300கன அடி நீரும் மீதமுள்ள நீர் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கன மழை பெய்து வருகிறது.
கன மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி வரை காவிரியில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 50,000 கன அடி முதல் 70 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
உபரி நீர் திறப்பு காரணமாக காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மேட்டூர் நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் அவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கி கால்வாய் பகுதிகளில் உள்ள தகமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் மேட்டூர் வட்டாட்சியர் ரமேஷ், மேட்டூர் தீயணைப்பு படை அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
உபரி நீர் போக்கி கால்வாய் பகுதியில் விலங்குகள், மனிதர்கள் யாரேனும் உள்ளனரா என்று பார்வையிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
காவிரி வெள்ளத்தில் குளிக்கவும் துணி துவைக்கவும் கால்நடைகளை குளிப்பாட்டவும் செல்லக்கூடாது என்றும் வெள்ளத்தின் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதையும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.