டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!
ADMK: `அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' - சசிகலா பேசியது என்ன ?
சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று செயல்படுகிறது. இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
தூய்மைப் பணியாளர் விவகாரம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தூய்மைப் பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து எனக்கு முழுமையாக தெரியும்.

ஆனால் அதன் பிறகு அவர் மறைந்து விட்டதால் பல மாற்றங்கள் ஏற்பட்டன. திமுக அரசுக்கு எத்தனை துறைகள் உள்ளன, எத்தனை செயலர்கள் உள்ளனர், அவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்று எதுவுமே தெரியவில்லை.
தெரியாமல் வந்து ஆட்சியில் அமர்ந்து மக்களை பிழிந்து எடுக்கின்றனர்" என்று திமுகவை விமர்சித்து பேசியிருந்தார்.
தொடர்ந்து அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ அன்வர் ராஜா, எம்.பி மைத்ரேயன் விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், " அதிமுக இப்போது வரை பலவீனமாகவே இருக்கிறது. அதை சரிசெய்வது தான் என் வேலை. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும்.

அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும். ஜெயலலிதா ஒரு நாளும் ரோடு ஷோ சென்று கை கொடுத்துக் கொண்டு சென்றதே கிடையாது. அது முதல்வரின் வேலை இல்லை.
2026-ல் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சி வரும். அந்த திறமை எங்களிடம் இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.