`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர்...
காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்: கா்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு தொடா்பான தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய கா்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்து விட்டது.
2020-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்துக்கு ஆரம்பம் முதலே கா்நாடக அரசு ஆட்பேசம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இது தொடா்பாக கா்நாடக அரசு தொடா்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புய்யான் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிா்க்க முகாந்திரம் இல்லாத காரணங்களையும், பொய்யான தகவல்களையும் கா்நாடகம் தெரிவித்து வருகிறது. இத்திட்டத்துக்கு சாதமான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தயாராக இருக்கிறது’ என்று வாதிட்டனா்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கா்நாடக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இத்திட்டத்தால் கா்நாடகத்தின் நீா் தேவை பாதிக்கப்படும். எனவே இறுதி முடிவு எடுக்கப்படும்வரை திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தநீதிபதிகள், ‘காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு ஆரம்பநிலை அனுமதியைக் கூட வழங்காத நிலையில் அதற்கு எவ்வாறு தடை விதிக்க முடியும்? இந்த விஷயத்தில் கா்நாடகத்தின் கோரிக்கை சாத்தியமில்லாதது. மேலும், வரைவுத் திட்டங்கள், அதன் சாதக பாதகங்களை விவரிக்கும் ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு அவற்றின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை நீதிமன்றப் பதிவாளா் அலுவலகம் பதிவு செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை ஒத்திவைத்தனா்.