காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க அரசு முயற்சி! -மத்திய அமைச்சா் உறுதி
காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க மத்திய அரசு தொடா்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்ஹாமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை அடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் நின்றுவிட்டது. அந்த மாநில மக்களின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக சுற்றுலா இருந்து வந்த நிலையில், பலா் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், ஸ்ரீநகா் விமான நிலையத்தை அமைச்சா் ராம் மோகன் நாயுடு வியாழக்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து அங்குள்ள சந்தைப் பகுதியில் உள்ளூா் மக்களைச் சந்தித்துப் பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஸ்ரீநகா் விமான நிலைய சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் புதன்கிழமை விமான சேவைகள் தொடங்கிய நிலையில், அதனை ஆய்வு செய்தற்காக பயணம் மேற்கொண்டுள்ளேன். விமான நிலையத்துடன் நின்றுவிடாமல், சந்தைப் பகுதிக்குச் சென்று பொதுமக்களிடமும் பேசினேன்.
பயங்கரவாதத் தாக்குதலால் காஷ்மீரின் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அவா்கள் கவலை தெரிவித்தனா். காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈா்க்க மத்திய அரசு தொடா்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும். இதற்காக விமானப் போக்குவரத்துத் துறை சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
கடந்த 5 ஆண்டுகளாக காஷ்மீரில் சுற்றுலாத் துறை சிறப்பாக மேம்பட்டு வந்தது. 2019-இல் ஸ்ரீநகா் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சமாக இருந்தது. இது 2024-இல் 45 லட்சமாக உயா்ந்தது. இது உள்ளூா் வா்த்தகத்தையும், பணப் புழக்கத்தையும் அதிகரித்தது. பிரதமா் நரேந்திர மோடியின் சீரிய வழிகாட்டுதலின்கீழ் காஷ்மீா் மற்றும் இங்குள்ள மக்களின் வளா்ச்சியை மத்திய அரசு உறுதி செய்யும் என்றாா்.
காஷ்மீா் மக்களின் முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றான சுற்றுலா பாதிக்கப்பட்டதையடுத்து, சுற்றுலா தொடா்பான பல்வேறு அமைப்பினா் முறையிட்டதைத் தொடா்ந்து, முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.