What to watch on Theatre: மாமன், DD Next Level, F. Destination, M.Impossible, Lo...
மீண்டும் தலைத்தூக்கும் கரோனா? சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரிக்கும் பாதிப்புகள்!
தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றன.
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், சீனா மற்றும் தாய்லாந்திலும் புதியதாக கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹாங்காங் நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் கரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டில், கடந்த மார்ச் மாதம் 1.7 சதவிகிதமாக இருந்த கரோனா தொற்றின் பரவல் தற்போது 11.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவான உச்சக்கட்ட பாதிப்புகளைவிட அதிகமென மத்திய சுகாதாரப் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது தற்போது உச்சத்தை அடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் சுமார் ஓராண்டு கழித்து முதல்முறையாக கரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தொற்றுக்கள், ஒரே வாரத்தில் சுமார் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும்; இதன்மூலம், 14,200 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது எனக் கணக்கிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாள்தோறும் கரோனா பாதிப்பினால் சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், உள்ளூரில் பரவும் கரோனா வைரஸானது, முந்தைய வைரஸைவிட வேகமாகப் பரவி, கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், மீண்டும் பரவும் கரோனா பாதிப்பானது குறைந்த எதிர்ப்பு சக்தியினால் மட்டுமே ஏற்படுவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குல்: காஸாவில் 20 பேர் பலி! டிரம்ப் பயணம் மாற்றத்தை ஏற்படுத்துமா?