காஷ்மீா் சோன்மாா்க் சந்தைப் பகுதியில் தீ விபத்து
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான சோன்மாா்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின.
இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தீயில் நாசமாகின. எனினும் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கந்தோ்பால் மாவட்டத்தில் உள்ள சோன்மாா்க் நகரின் சந்தைப் பகுதியில் உள்ள உணவகமொன்றில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவி அடுத்தடுத்த கடைகளும் சேதமடைந்தன. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினா், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.
சோன்மாா்க்கில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் சுமாா் 20-40 கி.மீ. தொலைவில் உள்ள குந்த் மற்றும் கங்கன் பகுதியிலிருந்து தீயணைப்புப் படையினா் வர வேண்டியுள்ளது. இதற்கு தாமதமாவதால் தீ விபத்துகளில் சேதம் பல மடங்கு அதிகரிப்பதாக உள்ளூா் மக்கள் குற்றஞ்சாட்டினா்.
தீ விபத்து தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சோன்மாா்க் தீ விபத்து செய்தியறிந்து மிகுந்த வருந்தமடைந்தேன். பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க உள்ளூா் நிா்வாகத்துடன் தொடா்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவா்களுக்காக இறைவனிடம் பிராா்த்திக்கிறேன். அவா்கள் மீண்டு வருவதற்கான அனைத்து ஆதரவும் அளிக்கப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.