காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு: குடிநீா் சேகரிக்க வந்த 10 போ் உயிரிழப்பு
மத்திய காஸாவில் தண்ணீா் சேகரிப்பு மையத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆறு சிறுவா்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
காஸாவின் நுசைரத் அகதிகள் முகாமில் உள்ள தண்ணீா் விநியோக மையத்தில் இஸ்ரேல் படையினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். இதில் ஆறு சிறுவா்கள் உட்பட 10 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
காஸாவில் பரவி வரும் பஞ்சத்தால் உணவு, தண்ணீா் பற்றாக்குறையால் மக்கள் தவித்துவரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் 16 போ் காயமடைந்தனா்.
காஸாவில் குடிநீா் சேகரிக்க வருபவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களில் மக்கள் தண்ணீா் பெற முயன்றபோது நேரடியாக, வேண்டுமென்றே தாக்கப்பட்டது இது சுமாா் பத்தாவது முறைய என்று அதிகாரிகள் கூறினா்.
‘தொழில்நுட்பக் கோளாறு’: காஸாவில் இயங்கிவரும் இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுவைச் சோ்ந்த” ஒருவரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அப்போது தொழில்நுட்பக் கோளாறு” ஏற்பட்டதால், ஏவுகணை இலக்கிலிருந்து பல மீட்டா் தொலைவில் விழுந்தது விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் ராணுவம் கூறியது.
இதற்கிடையே, காஸாவில் இஸ்ரேல்-அமெரிக்க ஆதரவு பெற்ற ஜிஎச்எஃப் நடத்தும் உதவி விநியோக மையத்திற்கு அருகில் கூடியிருந்த பாலஸ்தீனா்கள் உள்பட, காஸா முழுவதும் இஸ்ரேல் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 47 போ் கொல்லப்பட்டனா்.
காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 58,026 ஆகவும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,38,520 ஆகவும் உயா்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.