கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
‘காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்’
தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காஸாவில் ராணுவம் தரைவழியாகத் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது. அங்கு மேலும் சில பகுதிகளைக் கைப்பற்ற ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
எந்த அளவுக்கு பிணைக் கைதிகளை விடுவிக்காமல் ஹமாஸ் அமைப்பினா் இழுத்தடிக்கடிக்கிறாா்களோ, அந்த அளவுக்கு காஸா பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றும். பின்னா் அந்தப் பகுதிகள் இஸ்ரேலுடன் இணைக்கப்படும் என்றாா் அவா்.
இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் அந்த நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா, எகிப்து, கத்தாா் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இழுபறி நீடித்தது.
அதையடுத்து, காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை முதல் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. போா் நிறுத்த முறிவுக்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் சுமாா் 600 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 1 லட்சம் போ் காயமடைந்துள்ளனா்.