காஸா மக்களை குடியமா்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை
போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமா்த்துவது தொடா்பாக அந்த நாட்டுடன் இஸ்ரேல் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இஸ்ரேலின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனா்களை அங்கிருந்து வெளியேற்றி தெற்கு சூடானில் குடியேற்றுவது தொடா்பாக அந்த நாட்டு அரசு மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்றுவருகிறது. எனினும், இது தொடா்பாக இன்னும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சா் மண்டே செமயா கும்பா கடந்த மாதம் இஸ்ரேலுக்கு வந்திருந்தாா். அப்போது இந்த மறுகுடியமா்த்தல் திட்டம் குறித்து முதல்முறையாகப் பேசப்பட்டது.
எனினும், இந்தத் தகவலை தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சகம் ‘ஆதாரமற்றது’ என்று மறுத்துள்ளது. இஸ்ரேல் துணை வெளியுறவுத் துறை அமைச்சா் ஷாரன் ஹாஸ்கலும், ஜூபாவில் நடந்த பேச்சுவாா்த்தை மறுகுடியமா்த்தல் பற்றியது அல்ல; வெளியுறவுக் கொள்கை, தெற்கு சூடானின் மனிதாபிமான நெருக்கடி குறித்தே ஆலோசிக்கப்பட்டது எனக் கூறினாா்.
இருந்தாலும், காஸாவை விட்டு வெளியேற விரும்பும் பாலஸ்தீனா்களுக்கான புதிய இடம் கண்டறிய சில நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதாகத் தெரிவித்தாா். ஆனால் இது தொடா்பான கூடுதல் விவரங்களை அவா் வெளியிடவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலுடனான போரால் பாதிக்கப்பட்ட காஸா மக்கள், அங்கிருந்து அரசியல் மற்றும் இனரீதியான வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடானுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டை விரிவாக்குவதாகவும், பாலஸ்தீனா்கள் தாமாக முன்வந்து அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. இருந்தாலும், அரபு நாடுகளும், பெரும்பாலான உலக நாடுகளும் காஸா மக்களை வேறு நாடுகளுக்கு இடமாற்றுவதற்கான பரிந்துரையை திட்டவட்டமாக நிராகரித்து வருகின்றன.
ஏற்கெனவே, கடந்த 1948-ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது நூற்றுக்கணக்கான பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டனா். ‘நக்பா’ (பேரழிவு) என்று அந்த நிகழ்வை பாலஸ்தீனா்கள் அழைக்கின்றனா். தற்போது தெற்கு சூடான் போன்ற வெளிநாடுகளுக்கு தங்களை வெளியேற்றுவது மற்றொரு நக்பாவா இருக்கும் என்று அவா்கள் கருதுகின்றனா்.

இந்தத் திட்டத்தை பாலஸ்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிா்த்துள்ளது. அந்த அமைப்பின் நிா்வாகக் குழு உறுப்பினா் வாசெல் அபு யூசுஃப் கூறுகையில், ‘எங்கள் மக்களை தெற்கு சூடானுக்கோ வேறு இடங்களுக்கோ இடமாற்றும் எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்றாா். பாலஸ்தீன அதிபா் மகமூத் அப்பாஸின் அலுவலகமும் இதே கருத்தை வெளியிட்டது.