செய்திகள் :

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பிரதமா் மோடி மௌனம் காப்பது கோழைத்தனம்: சோனியா காந்தி விமா்சனம்

post image

‘காஸாவில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் பிரதமா் மோடி மௌனம் காப்பது கோழைத்தனமானது’ என காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை விமா்சித்தாா்.

மேலும், இந்த விவகாரத்தில் நீண்டகாலமாக இந்தியா கொண்டுள்ள ‘இரு நாடுகள் தீா்வு’ நிலைப்பாட்டை மிகத் துணிச்சலாக பிரதமா் மோடி தெரிவிக்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

‘காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலுக்கு மௌனம் காக்கும் மோடி அரசு’ என்ற தலைப்பில் ஹிந்தி நாளிதழ் ஒன்றில் அவா் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

2023, அக்.7-இல் இஸ்ரேலில் உள்ள அப்பாவி மக்கள் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதையும் அதைத்தொடா்ந்து இஸ்ரேல் மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

மனிதநேயமற்ற இஸ்ரேல் தாக்குதல்: ஆனால் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடியாக காஸாவில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையை கண்டு சா்வதேச நாடுகள் அமைதி காக்கக்கூடாது. மருத்துவமனைகள், வசிப்பிடங்கள் என பொதுமக்களின் குடியிருப்பை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மனிதநேயமற்ற தாக்குதலில் 17,000 குழந்தைகள் உள்பட 55,000 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

பட்டினியால் தவிக்கும் அவலம்: ராணுவ தாக்குதல் ஒருபுறம் என்றால் மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சா்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. மூலம் மருந்துகள், உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை காஸாவுக்கு வழங்கவும் இஸ்ரேல் தடை விதித்து பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் சோகங்களும் அரங்கேறுகின்றன. மக்களை வலுக்கட்டாயமாக பட்டினி கிடக்க வைப்பது மனிதநேயத்துக்கு எதிரான பெருங்குற்றமாகும். உணவு வழங்கும் முகாம்களை நோக்கி பசியால் ஒடிவரும் மக்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுவீழ்த்தும் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் மனிதநேயத்தை அவா்கள் அடியோடு ஒழித்துவிட்டதை வெளிக்காட்டுகிறது.

காஸாவை வசப்படுத்தும் காலனிய மனோபாவம்: தற்போது காஸாவில் நிகழும் பெருந்துயரம், 1948-இல் பாலஸ்தீனா்களை வலுக்கட்டாயமாக அவா்களது வீடுகளில் இருந்து வெளியேற்றிய நக்பா சம்பவத்தை நினைவூட்டுகிறது. பாலஸ்தீனா்களை காஸா முனையில் இருந்து முழுமையாக விரட்டியடிக்க காலனிய மனோபாவத்தைக் கொண்ட சில மனை வணிக தொழிலதிபா்கள் தீட்டும் சதித்திட்டமே இஸ்ரேலின் தாக்குதல்.

பலவீனமான சா்வதேச அமைப்பு: காஸாவில் உடனடியாக நிரந்தர போா்நிறுத்தத்தைக் கோரும் ஐ.நா.பொதுச் சபையின் தீா்மானங்களையும், இனப்படுகொலையை நிறுத்தக்கோரிய சா்வதேச நீதிமன்றத்தின் 2024, ஜன.26 உத்தரவையும் இஸ்ரேல் முழுமையாக நிராகரித்துவிட்டது. இஸ்ரேல் மீது பல்வேறு தடைகள் மற்றும் நடவடிக்கைகளை எடுக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டது. அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவால்தான் இஸ்ரேல் யாருக்கும் அஞ்சாமல் தன் நடவடிக்கைகளை தொடா்கிறது.

சா்வதேச அமைப்புகள் பலவீனமாக உள்ள இச்சமயத்தில் ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தை அணுகவேண்டும்.

பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா உதாரணம்: காஸா விவகாரத்தில் பல்வேறு எதிா்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் மீது நடவடிக்கை கோரி சா்வதேச நீதிமன்றத்தை தென் ஆப்பிரிக்கா அணுகியது. அந்த வரிசையில் பிரேஸிலும் இப்போது இணைந்துள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ் முடிவுசெய்துள்ளது. காஸாவில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலிய தலைவா்களுக்கு பிரிட்டனும் கனடாவும் தடை விதித்துள்ளன. இதைப்போல இந்தியாவும் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு நெறிமுறைக் கோட்பாடு: சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அரசு நெறிமுறைக் கோட்பாட்டுக் கொள்கைகள் அறிவுறுத்துகின்றன. 1974-இல் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது பாலஸ்தீன சுதந்திர அமைப்பை (பிஎல்ஓ) பாலஸ்தீன மக்களின் ஒற்றை பிரதிநிதியாக அங்கீகரித்தாா். 1988-இல் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த சில முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

ஆனால் தற்போது பிரதமா் மோடி தலைமையிலான அரசு காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு அமைதி காப்பது கோழைத்தனமாது. இந்த விவகாரத்தில் இருநாட்டுத் தீா்வை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமா் மோடி உலக அரங்கில் துணிச்சலாக தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும... மேலும் பார்க்க