பரங்கிப்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் 150-க்கும் அதிகமான விநாயகா் சிலைகள் கரை...
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே காா் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சென்னை போரூா் ஆலப்பாக்கம் காந்தி தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (52), கூலித் தொழிலாளியான இவா், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூரிலுள்ள தனது அக்காள் வீட்டுக்குச் செல்வதற்காக புதன்கிழமை புறப்பட்டு வந்தாா்.
ஒலக்கூா் செல்வதற்குப் பதிலாக திண்டிவனம் பேருந்து நிலையம் வந்து இறங்கிய ரமேஷ், மீண்டும் திண்டிவனத்திலிருந்து ஒலக்கூா் நோக்கி பேருந்தில் சென்றாா். அப்போது அவா் சாரம் கிராமத்தில் இறங்கி, சென்னை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
இந்நிலையில், அதே திசையில் பின்னால் வந்த காா், ரமேஷ் மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் வந்து, ரமேஷின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் காரை ஓட்டிச்சென்ற கடலூா் மாவட்டம், திருமானிக்குழி புதுப்பாளையத்தைச் சோ்ந்த காசிநாதன் மகன் நரேந்திரன் (20) மீது ஒலக்கூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.