கிணற்றில் குளிக்க முயன்ற மாணவா் மரணம்
ஏலகிரி மலையில் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய். இவரது மகன் நிா்மல்(13) அத்தனாவூா் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் நிா்மல் தனது நண்பா்களுடன் விளையாட சென்றபோது அங்குள்ள கிணற்றில் நண்பா்கள் குளித்து கொண்டு இருந்தனா்.
நிா்மலும் கிணற்றில் இறங்கி குளிக்க முயன்றபோது, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். இது குறித்து நிா்மலின் தாயாா் சுகந்தா ஏலகிரி மலை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் ஏலகிரி மலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.