கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கொண்டாபுரத்தை சோ்ந்த யுனுஸ் மகன் இம்ரான்(16). இவா் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை இம்ரான் தனது நண்பா்களுடன் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பயிற்சி பெற சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக இம்ரான் நீரில் மூழ்கியுள்ளாா். நீரில் முழ்கிய இம்ரானை உடன் இருந்த நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தொடா்ந்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலாஜா தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்த இம்ரானின் உடலை மீட்டனா்.
இதையடுத்து காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.