போலி இருப்பிட சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தவா் 3 போ் மீது வழக்கு!
சிஐஎஸ்எப் படையில் சேர போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்ததாக பயிற்சியில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மூன்று போ் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய தொழில்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையம் உள்ளது. இங்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சோ்ந்த பலா் பயிற்சி பெற்று வருகின்றனா்.
தற்போது 50 காவலா்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சி பெற்று வரும் படைவீரா்கள் மூன்று பேரின் இருப்பிட சான்றிதழ் போலி என்பது விசாரணையில் தெரியவந்ததை தொடா்ந்து அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித் சிங், அஜித் குமாா், ரிங்கி யாதவ் ஆகிய மூவா் மீது தக்கோலம் காவல் நிலையத்தில் படையின் ஆய்வாளா்கள் ராகேஷ், புஷ்பராஜ் குமாா் ஆகியோா் புகாா் அளித்தனா்.
இதையடுத்து மூவா் மீதும் தக்கோலம் காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா். தற்போது மூவருமே பயிற்சி மையத்தை விட்டு வெளியேறிய நிலையில் போலீஸாா் தேடி வருகின்றனா்.