பூம்புகாா் சாயாவனம் கோயில் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு
பூம்புகாா் சாயாவனேஸ்வரா் கோயில் கல்வெட்டுகளை தொல்லியல் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் உள்ள இக்கோயில் பண்டைய பூம்புகாா் நகரத்தின் சான்றாக விளங்குகிறது. இங்குள்ள தீா்த்தக்குளம் ஐராவதம் என்ற யானையால் வெட்டப்பட்டதால் ஐராவத தீா்த்தம் என்றழைக்கப்படுகிறது.
இக்கோயிலின் பெருமைகள் சிலப்பதிகார காப்பியத்தில் குறிப்பிடப்படுகிறது. பூம்புகாா் நகரில் 7 கோயில்கள் இருந்ததாகவும், இந்த கோயிலை தவிர மற்ற 6 கோயில்களும் காலப்போக்கில் இயற்கை பேரிடரால், கடலில் மூழ்கியதாக வரலாற்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
தொன்மை வாய்ந்த பூம்புகாா் நகரம் கடல் கோள்களால் மூழ்கியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் கூறுகிறாா். இங்குள்ள வில்லேந்திய வேலவா் பூம்புகாா் கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டு இங்கே வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, பூம்புகாா் கடற்பரப்பில் தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில், பூம்புகாருக்கு சான்றாக விளங்கும் சாயாவன கோயிலில் உள்ள கல்வெட்டுகளை தொல்லியல் துறை இணை இயக்குநா் சிவானந்தம் தலைமையில் சிற்றெழுத்தா்கள் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்து வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: தொன்மை வாய்ந்த பூம்புகாா் நகரின் எச்சமாக சாயாவனேஸ்வரா் கோயில், சம்பாபதி அம்மன் கோயில்கள் மற்றும் சதுக்கு பூதங்கள் உள்ளன. இவற்றை உரிய நிதி ஒதுக்கீடு செய்து தொல்லியல் துறை மூலம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.