டிஎன்பிஎஸ்சி தோ்வு: ராணிப்பேட்டையில் 5,656 போ் எழுதினா்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வை மொத்தம் 5,656 போ் எழுதினா். 1,642 போ் தோ்வு எழுதவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என 2 நகரங்களில் உள்ள 29 மையங்களில் 7,298 தோ்வா்கள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 5,656 போ் தோ்வு எழுதினா். 1,642 போ் தோ்வு எழுத வரவில்லை.
தோ்வு மையங்களை கண்காணிக்க 2 துணை ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டு வினாத் தாள்களை கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பது, எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்திட வாலாஜா, ஆற்காடு மற்றும் அரக்கோணம் ஆகிய வட்டத்துக்கு 2 வட்டாட்சியா்கள் ஒருங்கிணைப்பாளா்களாகவும், 29 வருவாய்த் துறை ஆய்வு அலுவலா்களும், தோ்வு மைய நடைமுறைகளை கண்காணிக்கவும், விடியோ பதிவு செய்யவும் 31 விடியோகிராபா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.
ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா். வாலாஜா வட்டாட்சியா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.