கிரகங்களின் வரிசை கும்ப விமரிசை
மகா நதிகள் கங்கா, யமுனை சரஸ்வதி சங்கமிக்கும் புண்ணிய ஸ்தலம் உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ். பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா தை மாத சங்கராந்தியிலிருந்து மாசி மாத சிவராத்திரி வரை கொண்டாடப்படுகிறது.
சூரிய கிரகத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் சூரியனைச் சுற்றி வர பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவு அடைவதை வைத்து கும்பமேளா திருவிழா கொண்டாடப்படுகிறது. வியாழன் தனது சுழற்சியை 12 முறை நிறைவு செய்ய 144 ஆண்டுகள் ஆகின்றன. இது மிக விசேஷமான மஹா கும்பம் . அடுத்த மஹா கும்பம் 22- ஆம் நூற்றாண்டில் வரும். இந்த நூற்றாண்டில் 2025 -ஆம் ஆண்டு நிகழும் மஹா கும்பமேளா 144 ஆண்டுகள் கடந்து வருவதால் மிக அதிக எதிா்பாா்ப்புடன் பக்தா்கள் திரிவேணி சங்கத்தில் ஐக்கியமாக திரண்டுள்ளனா்.
சுமாா் 45 கோடி மக்கள் ஒன்றரை மாத இடைவெளியில் பிரயாக்ராஜில் கூடுவாா்கள் என்ற கணக்கில் மிக துல்லியமான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் கடந்த ஓா் ஆண்டுக்கும் மேலாக ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் விமான தள விரிவாக்கம், புதிய சாலைகள், கங்கை நதிக்கரையில் பதினைந்து கிலோ மீட்டா் நீளத்தில் அகலமான கரை தளம் ஆகிய இவை நிரந்தர கட்டமைப்புகள். இவை தவிர, யாத்திரிகா்கள் தங்க 2 லட்சம் தற்காலிகக் கூடாரங்கள், ஒன்றரை லட்சம் கழிப்பறை வசதி, 200 குப்பை லாரிகள், ஆயிரக்கணக்கில் குப்பை சேகரிப்பு தொட்டிகள், ஒரு லட்சம் புதிய எல் இ டி விளக்குகள், 50 பாலங்கள், 3000 சிசிடிவி கேமராக்கள், 350 தீயணைப்பு வாகனங்கள், புதிய அணுகு சாலைகள், உடனடி மருத்துவ வசதி போன்ற பலவகை கட்டமைப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஐம்பதாயிரம் காவல்துறையினா், மூவாயிரம் தீயணைப்பு வீரா்கள், பேரிடா் பாதுகாப்பு வீரா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் மக்கள் பணியில் 24 மணி நேரமும் விழித்திருப்பாா்கள். செயற்கை மதி நுட்பம் உயா்தர உபகரணங்கள் வெகு சிறப்பான முறையில் பாதுகாப்புப் பணியில் உபயோகிக்கப்படுகின்றன.
நாற்பது சதுர கிலோமீட்டா் உள்ள பகுதியில் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, பல நாடுகளிலுமிருந்தும் நாற்பது கோடி பக்தா்கள் பங்கேற்பாா்கள். கலாசாரமும் ஆன்மீகமும் சங்கமிக்கும் புனித இடம் பிரயாக்ராஜ். உலகிலேயே இத்தகைய அமைதியான மக்கள் வெள்ளத்தைக் காண கோடிக் கண்கள் வேண்டும். இதனால் உள்ளூா் மக்களின் பொருளாதாரம் பெருகும். ரூபாய் நாலு லட்சம் கோடி, யாத்திரிகா்களின் வருகையால் உத்தர பிரதேச அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான தகவல்.
சிலப்பதிகாரத்தில் உள்ள அழகான பாடல் ஒன்று:
‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே...’
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இந்தப் பாடலை கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினாா்கள். இந்தப் பாடல் சமுத்திரத்தில் இருந்து அமிா்த கலசம் திரட்டப்பட்ட புராணக் கதையைக் கூறுகிறது.
வடவரை, மேருமலையாகிய மந்திரகிரியை குறிக்கும். மேருமலையை மத்தாகவும் கடல் நாகம் வாசுகியை நாணாகவும் கொண்டு தேவா்களும் அசுரா்களும் ஆழ்கடலில் அமிா்தத்தை கடைந்தெடுக்க எடுத்த அண்டவியல் நிகழ்வில் முதலில் வெளி வந்தது நஞ்சு. அதனை சிவபெருமான் பருகி தொண்டையில் இருத்திக் கொண்டதால் திருநீலகண்டரானாா். கடைதலில் இறுதியில் வந்தது அமரத்துவத்தை அளிக்கவல்ல அமிா்த கலசம். அசுரா்களும் தேவா்களும் அதைக் கைப்பற்ற நடந்த போட்டியில் அமிா்தம் உஜ்ஜயினி, நாசிக், ஹரித்வாா், பிரயாக்ராஜ் ஆகிய நாலு இடங்களில் சிதறியதாகவும், அதே நேரத்தில் சூரியன், புதன், சந்திரன், வெள்ளி, வியாழன் ஆகிய கோள்கள் நோ் கோட்டில் வந்த விந்தையைப் புராணம் விவரிக்கிறது. அங்குள்ள நதிகளான நாசிக்கில் கோதாவரி, உஜ்ஜயினியில் ஷிப்ரா நதி, ஹரித்வாரில் கங்கை , பிரயாக்ராஜில் திரிவேணிசங்கமம் ஆகியவை கிரகங்கள் மூலம் தெய்வீக சக்தி பெறுகின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த அண்டவியல் சந்திப்பில் விளையும் அமானுஷ்ய சக்தியை ஆத்மாா்த்தமாக உணர கும்பமேளா லட்சக்கணக்கான பக்தா்களை ஈா்க்கிறது.
கும்ப மேளாவின் இன்னொரு விசேஷம், கணிதம் சம்பந்தப்பட்டது. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 356.2425 நாட்கள் ஆகின்றன. ஆனால் ஓா் ஆண்டை நாம் 365 நாள்கள் என்று கணக்கிடுகிறோம். நான்கு ஆண்டுகளில் இந்த வித்தியாசம் ஒரு நாள் ஆகிறது. அதனால் தான் நான்கு ஆண்டுகளுக்கொருமுறை லீப் இயா் என்று அந்த ஆண்டை 366 நாள்களாகக் கணக்கிடுகிறோம். இதன்படி சராசரி பூமி சூரியனை சுற்றுவதற்கு 365.2425 என்பதற்குப் பதிலாக 365.25 என்றாகிறது . இந்த சிறு வித்தியாசம் நானூறு வருடங்களில் மூன்று நாட்களாகிறது. அதனால் நூறு வருடங்களுக்கு ஒருமுறை இந்த மூன்று நாள்கள் கழிக்கப்பட வேண்டும். ஒரு லீப் வருடம் நூறாவது வருடத்தில் வருகையில் 400 -ஆல் வகுத்தலுக்கு உட்பட வேண்டும். உதாரணமாக 2000 லீப் ஆண்டு ஆனால் 2100, 2200, 2300 லீப் ஆண்டு ஆகாது.
மிக பெரிய கோளான வியாழன் சூரியனைச் சுற்றி வர 12 ஆண்டுகள் ஆகின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் வியாழனும் தங்களது ராசியில் சஞ்சரிக்கிறாா்கள். அதன் அடிப்படையில் தான் கும்பம் நிா்ணயிக்கப்படுகிறது. வியாழனின் ஒரு சூரியன் சுற்று 12 ஆண்டுகளுக்கு சற்றுக் குறைவாக 11.8618 ஆண்டுகள். ஆறு சுற்று 72 ஆண்டுகள் முடிந்த பிறகு அந்த குறைவு ஓா் ஆண்டு ஆகும்போது அடுத்த கும்பம் 11 ஆண்டுகளில் அதாவது 83 - ஆவது வருடத்தில் வரும். இந்த வகையில் வியாழன் சூரியன் நோ் கோளாக இருந்து தத்தம் ராசியில் சஞ்சரித்து கும்ப திருவிழாவை வரவேற்கும். கோள்களின் வரிசையால் புனித தலங்களில் நதிகள் பிரபஞ்சத்தின் சக்தியைப் பெற்று அமிா்த கலசமாகிறது என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
மனித உடல் பிரபஞ்சத்தோடு இணைந்திருக்கிறது. நமது உடலில் 7, 200 நாடிகள் உள்ளன. இந்த நாடிகள் மூலம் தான் உடலில் பிராணன் உயிா் நாடி பயணித்து நம் செயலாக்கத்திற்கு உதவுகிறது. நாடிகளின் சந்திப்பு சக்கரங்கள் 114. இந்த சந்திப்புகள் முக்கோண வடிவமுடையவை. இவற்றில் இரண்டு சக்கரங்கள் உடலின் வெளியே உள்ள சூக்ஷ்ம நாடிகள். எஞ்சியுள்ள 112- இல், நான்கு சக்கரங்கள் மற்ற நாடி மையங்களால் வளரும். இந்த 108 எண்ணின் சிறப்பான அம்சம் சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மனித உடலின் இயக்கத்திலும் பிரதிபலிப்பதே. பூமிக்கு ஒளி தரும் சூரியனின் விட்ட அளவை 108 -ஆல் பெருக்கினால் பூமி சூரியனிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது புலனாகும். அதே போல் சந்திரனின் விட்ட அளவை 108 -ஆல் பெருக்கினால் சந்திரன் பூமிக்கும் உள்ள இடைவெளி கிடைக்கும். சூரியனின் விட்ட அளவு பூமியின் விட்ட அளவை விட 108 மடங்கு அதிகம்! சக்தி வாய்ந்த எண் 108! 108 திவ்ய தேசங்கள், ஜப மாலையில் 108 ருத்திராட்சம் , வேத சாராம்சத்தை விவரிக்கும் உபநிஷத்துக்கள் 108! சூரியமண்டலக் குடும்பத்தில் உள்ள கிரகங்களின் நிலை, விண்வெளியில் சூரியனை சுற்றி வரும் நேரம் இவற்றின் அடிப்படையில் கும்பமேளா நிகழ்கிறது. இவற்றை துல்லியமாகக் கணக்கிட்ட நமது முன்னோா்களின் விஞ்ஞான அறிவு வியப்பூட்டுகிறது.
கும்ப மேளாவின் இன்னொரு தனிச் சிறப்பு உள்ளூா் மக்கள் பாரபட்சம் இன்றி, பக்தா்களுக்கு உணவும் தங்க இடமும் மனமுவந்து அளிக்கும் உபசரிப்பு. “அதிதி தேவோ பவ” விருந்தினா் தெய்வத்திற்குச் சமமானவா் என்ற வாக்கினை சிரம் மேல் கொண்டு பக்தா்களுக்குப் பணிவிடை செய்யும் மக்கள் வணக்கத்துக்கு உரியவா்கள்.
எது நடக்கக் கூடாது என்று தயாா் செய்கிறோமோ, அது நடக்கும் என்பது நிா்வாகத்தில் எழுதப்படாத தலைவிதி. அதை மனதில் வைத்துதான் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முழு வீச்சோடு தடுக்கப்பட்டால் நல்லது. அசம்பாவிதம் நிகழ்ந்தால் பதறாமல் பாதிப்பைத் தணிக்க சீரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுவே திறமையான நிா்வாகத்தின் செயல்முறை. அந்த விதத்தில் பிரயாக்ராஜ் நெரிசலால் ஏற்பட்ட பாதிப்பு விரைவான செயலாக்கம் மூலம் கையாளப்பட்டது. குறைபாடுகளைக் கண்டறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நெரிசல் ஏற்படுவதற்குக் காரணம் வரிசையைக் கடைப்பிடிக்கத் தவறுவதுதான். எந்த நிகழ்வு என்றாலும் வரிசையாகச் செல்ல வேண்டும். வரிசையாகச் செல்லாமல் முண்டியடிக்கும் மனப்போக்கு விபத்தில் முடியும். சாலைப் போக்குவரத்தில், கோயில்களில், ரயில், விமானப் பயணங்களின் முடிவில் வெளியேற அவசரம் இவை எல்லாம் ஆபத்தில் முடியும். பிறரை மிதித்தாவது நாம் முன்னேற வேண்டும் என்ற சுயநலம். இந்த கட்டுக்கடங்காத நடத்தை உயிரிழப்புக்கு வித்திடுகிறது.
சாதாரண மக்கள், விவசாயிகள், அன்றாட வாழ்க்கையில் உழலும் ஏழைகள், உயா்ந்தோா், தாழ்ந்தோா் பணக்காரா், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் கும்ப விழாவில் புனித நீராடலுக்கும் பிரயாக்ராஜ், ஹரித்வாா், உஜயின் நாசிக் புண்ணிய ஸ்தலங்களுக்கு மக்கள் குவிகின்றனா். ஹிந்து மதத்தின் மகாத்மியம், எந்த சடங்குக்கும் வற்புறுத்தல் இல்லை; நிபந்தனை இல்லை; கட்டாயம் இல்லை. பக்தா்கள் சுய உந்துதலோடு, சுயகட்டுப்பாடோடு வருவதுதான், கும்பமேளாவின் தனிச் சிறப்பு.