இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: காங்கயம் வட்டாட்சியா் அறிவிப்பு
காங்கயம் தாலுகாவில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காங்கயம் தாலுகாவுக்கு உள்பட்ட பச்சாபாளையம், பழையகோட்டை, மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, பழையகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட குட்டப்பாளையம், கணபதிபாளையம், வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காங்கயம்பாளையம், சம்பந்தம்பாளையம் ஆகிய 8 கிராமங்களுக்கான கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யும் பொருட்டு, தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்கலாம். காங்கயம் தாலுகா பகுதியில் வசிப்பவராகவும், தமிழில் பிழையின்றி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 32 வயதுடையவராக இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா், பட்டியல் இனத்தவா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளா்வு உண்டு. விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து, வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதிக்குள் காங்கயம் வட்டாட்சியருக்கு பதிவஞ்சல் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரிலும் வழங்கலாம்.
இது தொடா்பாக கூடுதல் தகவல் தேவைப்படுவோா் காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.