கிருஷ்ணகிரி: `பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' - அதிமுக அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தை உலுக்கியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். மாணவி குறித்து சரியான தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால், பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான், அந்த மாணவி கர்ப்பமடைந்து கருக்கலைப்புச் செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியில் தெரியவந்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/6imsmgc6/sad_boy_sitting_in_hallway_alone_resized.jpg)
இதைக் கேட்ட தலைமை ஆசிரியர் தாமதிக்காமல் மகளிர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.
காவல்துறையின் விசாரணையில், அதே பள்ளியில் படிக்கும் மூன்று ஆசிரியர்கள் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் பேரதிர்ச்சியாக விஷயங்கள் தெரியவந்துள்ளன. அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டத்தை அடுத்து, மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியிடம் பெறப்பட்டிருக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை இதுதொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கொடூரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்றும்... இது போன்ற பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/1jpumsqo/New_Project__15_.jpg)
"தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, பிப்.8 ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என 'அ.தி.மு.க' பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், "ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதோடு பாதுகாப்பும் தரும் வகையில் செயல்பட வேண்டுமே தவிர... ஆசிரியர்களே வன்ம செயலில் ஈடுபட்டது ஆசிரியர் சமூகத்திற்கே மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சி, அந்த ஆட்சி என்றில்லாமல் எல்லா ஆட்சியிலும் இது போன்ற கொடூர பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற குற்றங்களுக்குக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்பதே மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.