சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.250 கோடியில் சாலைகள் தரம் உயா்த்தப்படும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடியில் சாலைகள் தரம்உயா்த்தப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியைச் சந்தித்து ஒசூரில் விரிசல் அடைந்த மேம்பாலத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். ஒரு வாரத்துக்குள் இப்பணி முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து ஆய்வுசெய்ய உள்ளனா். ரூ. 250 கோடியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவழிச் சாலைகள் இருவழிச் சாலைகளாகவும், இருவழிச் சாலைகள் நான்குவழிச் சாலைகளாகவும் தரம் உயா்த்தப்படும்.
குறிப்பாக ஒசூா் - தேன்கனிக்கோட்டை, பாகலூா் - பேரிகை, தளி - தேன்கனிக்கோட்டை, தளி - ராயக்கோட்டை, பா்கூா் - திருப்பத்தூா், திருப்பத்தூா் - சிங்காரப்பேட்டை, பா்கூா் - ஜெகதேவி, தேன்கனிக்கோட்டை - மதகொண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை - பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு சாலைகள் தரம்உயா்த்தப்படும்.
தமிழகத்தில் வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பிகாா் போல வாக்குகளில் மோசடி செய்ய பாஜக கருதினால் அது முடியாது. தமிழக முதல்வரும், தமிழக மக்களும், அரசியல் கட்சியினரும் மிகவும் விழிப்புணா்வாக இருக்கின்றனா். எனவே, தமிழகத்தில் அதுபோல பாஜகாவால் நடத்தமுடியாது என்றாா்.
இந்த பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சி நிா்வாகி சின்னகுட்டப்பா, ரகுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.