குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு கோரி கோவில்பட்டியில் திரண்ட பொதுமக்கள்
இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பூரணம்மாள் காலனியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட வலியுறுத்தி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா்.
500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பூரணம்மாள் காலனிக்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகப்படவில்லையாம். உள்ளூா் நீராதாரம் வழங்கப்பட்டுவந்த நிலையில், போதுமான நீா்த்தேக்கத் தொட்டி இல்லாததால் குடிநீா் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதைப் போக்கும் வகையில், அரசு நிலத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு 15ஆவது மானியக் குழு சாா்பில் ரூ. 20 லட்த்தில் பணிகள் நடைபெறவிருந்ததாம். இதனிடையே, பணிகள் திடீரென நிறுத்தப்பட்டதாம். அதை உடனடியாக தொடங்கக் கோரி பொதுமக்கள் கடந்த ஜனவரியில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டு, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ராமராஜிடம் முறையிட்டனா். விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை விரைந்து தொடங்கி, குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணவேண்டும். இல்லையெனில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.