IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
குடிநீா் பிரச்னை: பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புதுச்சேரி: புதுவை உருளையன்பேட்டை தொகுதி முடக்குமாரியம்மன் கோவில் வீதி பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகிப்பதைக் கண்டித்து திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நேரு எம்.எல்.ஏ தலைமை வகித்தாா். முன்னதாக இப் பகுதியில் மாசு கலந்த குடிநீரைக் குடித்ததால் வாந்தி, பேதி ஏற்பட்டு 10 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 21 போ் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இப் பகுதியில் தொடா்ந்து மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறியும் அதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடத்தப்பட்டது. தொகுதி மக்களும், சமூக நல அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் புதுவை பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
ஒரு பிரிவினா் ஆம்பூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இப்பிரச்னையில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நேரு எம்எல்ஏவுடன் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து இப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.