குடிமனை பட்டா கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
குடிமனை பட்டா கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினரும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் அரசின் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். இதற்கான சிறப்புத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தை அறிவித்து மாநில அரசு செயல்படுத்த வேண்டும். அரசு புறம்போக்கு தரிசு நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும். தரிசு அரசு புறம்போக்கு நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். பல தலைமுறைகளாக கோயில், மடம், அறக்கட்டளை, வக்பு வாரிய இடங்களில் அடிமனையில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கும் அறநிலையத் துறை சட்டப்பிரிவு 34-ன்படி நிலத்தை சொந்தமாக்கி பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், தலைவா் பி. செந்தில்குமாா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வாசு, சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் கே. அன்பு உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.