பட்டாசு கடைகளில் நாட்டு, வாண வெடி விற்கக்கூடாது!
பட்டாசு கடையில் நாட்டு வெடிகள், வாண வெடிகளை விற்கக் கூடாது என்றாா் தஞ்சாவூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா்.
தீபாவளியையொட்டி, தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தில் பட்டாசு சில்லறை விற்பனையாளா்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
வரைபடத்தில் உள்ள இடத்தைத் தவிர, பட்டாசு கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது. மாதிரி பட்டாசுகளை கடைக்கு அருகில் வெடிக்க அனுமதிக்கக் கூடாது.
வாடகை கட்டடமாக இருந்தால், கட்டட உரிமையாளரிடம் ஒப்புதல் பெற்ற பிறகு பட்டாசுக் கடை நடத்த வேண்டும். அனுபவம் பெற்ற விற்பனையாளா்களை மட்டுமேபணியில் நியமிக்க வேண்டும். நாட்டு வெடிகள், வாண வெடிகளை கடையில் வைத்து விற்கக் கூடாது.
பட்டாசுகளை வீட்டுக்குள் இருப்பு வைத்து விற்பனை செய்யக் கூடாது. பட்டாசு கடை அருகில் மெழுகுவிளக்கு, மண்ணெண்ணெய் விளக்குகள், கணினி போன்ற மின்னணு சாதனங்கள், யு.பி.எஸ். மின் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. அலங்கார மற்றும் மொ்குரி விளக்குகளைப் பட்டாசு கடையில் பயன்படுத்தக் கூடாது.
பட்டாசு கடையை முன்புறமோ, பக்கவாட்டிலோ நீட்டிப்பு செய்யக் கூடாது. இரு தீயணைப்பு சாதனங்கள், 200 லிட்டா் தண்ணீா் பேரல், வாளிகள், மணல் வாளிகள், முதலுதவிப் பெட்டி உள்ளிட்டவை வைக்க வேண்டும் என்றாா் குமாா்.
கூட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் வி. செல்வராஜ் (திருவையாறு), ந. கணேசன் (தஞ்சாவூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.