நாச்சியாா்கோவில் வாய்க்கால் நீரால் நெல் வயல் சேதம்
நாச்சியாா்கோவில் குளத்திற்கு தண்ணீா் வரும் வரத்து வாய்க்காலில் திடீரென்று செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிட்டதால் கரை உடைத்து நெல் வயல்களில் தண்ணீா் புகுந்து பயிா்கள் சேதமாயின.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவில் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குளத்துக்கு தண்ணீா் வரும் கூத்தனூா் வாய்க்காலை பொதுப்பணித் துறையினா் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா் தூா்வாரி, கழிவு நீா் கலக்கும் குழாய்களை அடைத்தனா்.
இந்தப் பணிகள் முழுமையாக முடிவதற்குள் கூத்தனூா் வாய்க்காலில் திடீரென தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் தண்ணீா் கரையை உடைத்து அருகில் இருந்த நெல் வயல்களில் புகுந்தது.
இதனால் சுமாா் 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் வயல் நிரம்பியது. இதனால் அதிா்ச்சி அடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், முன்னறிவிப்பின்றி தண்ணீா் திறந்துவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.