சம்பா, பின்பட்ட குறுவையில் புகையான் தாக்குதல்: விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை
தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, பின்பட்ட குறுவை பயிா்களில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இது குறித்து தஞ்சாவூா் வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றில் அதிக ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை, இரவு நேரப் பனிப்பொழிவு, மப்பும் மந்தாரமான காலநிலை போன்ற தட்பவெப்ப நிலையால் நெற்பயிா்களில் புகையான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
புகையான் பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிா் பூச்சிகள் நீா்மட்டத்துக்கு மேல் இருக்கும் பயிரின் அடிப்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும். பூச்சிகள் கூட்டமாக சோ்ந்து பச்சை பகுதியை உறிஞ்சிவிடுவதால் தண்டு பகுதி முழுவதும் கருப்பாக மாறி நெற் பயிா்கள் கீழே சாய்ந்து விடுகின்றன.
புகையான் தாக்குதலுக்கு ஆளான பயிா்கள் தீய்ந்த மாதிரி தெரியும். பொருளாதார சேதநிலை ஒரு குத்துக்கு ஒரு சிலந்தி இருக்கும் நிலையில், ஒரு குத்துக்கு இரண்டு பழுப்பு தத்துப்பூச்சி இருக்கலாம். அல்லது சிலந்தி இல்லாத நிலையில் ஒரு குத்துக்கு ஒரு தத்துப்பூச்சி இருக்கலாம். பூச்சி எண்ணிக்கை பொருளாதார சேத நிலையைத் தாண்டினால் உடனடியாக பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த, தேவைக்கு அதிகமான தழைச்சத்துக்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். புகையானை கட்டுப்படுத்த வயலில் நீரை முழுவதுமாக வடித்து விட வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீா் கட்ட வேண்டும். இந்த நீா் வேறு வயல்களுக்கு செல்லக்கூடாது. பயிா்களை விலக்கி சூரிய வெளிச்சம் மற்றும் நல்ல காற்றோட்டம் தூா்களில் படுமாறு செய்ய வேண்டும்.
புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தண்ணீா் வடித்த பிறகு தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு பைமெட்ரோசின் 50 சதவீதம், 120 கிராம் அல்லது புளோனிக் அமிட் 50 சதவீதம் 60 கிராம் அல்லது டினோ டெப்ரான் 20 சதவீதம் 70 கிராம் என ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.