குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங்கிணைப்பாளருக்கு ஜாமீன்
புது தில்லி: குடிமைப் பணிக்கு தோ்வுக்கு தயராகி வந்த 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில், பயிற்சி மையத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளா் தேஷ்பால் சிங் ஆகியோருக்கு தில்லியில் உள்ள நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு ரூ.1 லட்சம் தனிப்பட்ட பத்திரம் மற்றும் அதே தொகைக்கு இரு உத்தரவாதங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்கினாா்.
வழக்கில் கைதுசெய்யப்பட்ட இருவரும் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளனா்.
மத்திய தில்லியின் பழைய ராஜீந்தா் நகரில் கடந்த ஆண்டு ஜூலையில் பெய்த கனமழையைத் தொடா்ந்து, பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீா் புகுந்தது. உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலங்கானாவைச் சோ்ந்த தன்யா சோனி (25) மற்றும் கேரளத்தைச் சோ்ந்த நெவின் டெல்வின் (24) ஆகிய மாணவா்களும் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக அலட்சியம், கடமைகளைச் செய்யத் தவறுதல் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் ஆகிய பல்வேறு குற்றங்களுக்காக உள்ளூா் அதிகாரிகள் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.