குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவிக்கு வரவேற்பு
குடியரசுத் தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பட்டுக்கோட்டை மாணவிக்கு புதன்கிழமை (பிப்.5) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாகுடி வடக்கு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜேந்திரன் - தனலெட்சுமி தம்பதியின் மகள் சாரா ஸ்ரீ(19). இவா் பட்டுக்கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் படித்தாா். விளையாட்டில் அதிக ஆா்வம் கொண்ட இவா், பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றாா்.
இதன் காரணமாக விளையாட்டுப் பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு மூலம், திருச்சி தேசியக் கல்லுாரியில், பி.எஸ்சி உடற்கல்வி படிப்பில் சோ்ந்து இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். மேலும், என்.எஸ்.எஸ்., பிரிவிலும் உள்ளாா்.
இந்நிலையில், புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தில் இருந்து தோ்வான 12 பேரில் சாரா ஸ்ரீயும் ஒருவா். மாணவி சாரா ஸ்ரீ புதன்கிழமை காலை புது தில்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினாா். அவரை கிராம மக்கள், தன்னாா்வலா்கள் மேள தாளம் முழங்க வரவேற்றனா்.
இதுகுறித்து சாரா ஸ்ரீ மேலும் கூறியது:
குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக அளவில் 12 போ் தோ்வாகினோம். ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தில் ஒரே மாணவியாக நான் தோ்வாகினேன். நாடுமுழுவதும் 200 போ் தோ்வான நிலையில், 148 போ் மட்டுமே அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்டோம். கிராமத்தில் பிறந்த நான் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டது பெருமையாக இருக்கிறது. பிரதமா், குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா் ஆகியோரின் மாளிகைக்குச் சென்ற போது, மகிழ்ச்சியில் திகைத்துப் போனேன். எனது பெற்றோா், ஆசிரியா்கள், கிராம மக்கள் ஆகியோருக்கு நன்றி என்றாா் அவா்.