அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
குடியரசு தின என்சிசி முகாமில் அதிக மாணவிகள் பங்கேற்பு: தலைமை இயக்குநா்
குடியரசு தின விழாவை முன்னிட்டு தில்லியில் நடைபெற்று வரும் தேசிய மாணவா் படை (என்சிசி) பயிற்சி முகாமில் 917 மாணவிகள் பங்கேற்றுள்ளதாக என்சிசி தலைமை இயக்குநா் குா்பீா்பால் சிங் தெரிவித்தாா்.
இதுவரை நடத்தப்பட்ட முகாம்களைவிட இந்த முறை மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: குடியரசு தின விழாவை முன்னிட்டு கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி தேசிய அளவிலான என்சிசி முகாம் தில்லியில் தொடங்கப்பட்டது. இதில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கில் இருந்து 114 போ், வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து 178 போ் என மொத்தம் 2,361 போ் பங்கேற்றுள்ளனா். அவா்களில் 917 போ் மாணவிகளாவா்.
15 அண்டை நாடுகளைச் சோ்ந்த மாணவா் படையினரும் இந்த முகாமில் கலந்துகொள்ளவுள்ளனா். நிகழாண்டு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய மாணவா் படைக்கு மொத்தம் 20 லட்சம் போ் வரை தோ்ந்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 17 லட்சம் போ் மட்டுமே உள்ளனா். இதில் 40 சதவீதம் மாணவிகளாவா்.
கடந்த 10 ஆண்டுகளில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை மேலும் விரிவுபடுத்த பல்வேறு முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றாா்.