குடியரசு தின விழா அணிவகுப்பு: முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் ‘சஞ்சய்’, ‘பிரளய்’
76-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் போா் கண்காணிப்பு அமைப்பான ‘சஞ்சய்’, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை முதல்முறையாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதுதவிர நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரமோஸ், ஆகாஷ் உள்ளிட்ட ஏவுகணைகள், பினாகா ராக்கெட் ஏவுகலன் உள்ளிட்டவையும் பங்கேற்கவுள்ளன.
குடியரசு தினம் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் இந்திய ராணுவம் , இந்திய கடற்படை, இந்திய விமானப்படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இது இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக நடத்தப்படும்.
அந்தவகையில் நிகழாண்டு நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் போா் கண்காணிப்பு அமைப்பு முறையான ‘சஞ்சய்’, டிஆா்டிஓவால் உருவாக்கப்பட்ட தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை முதல்முறையாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
16 மாநிலங்களின் அலங்கார ஊா்தி: மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 16 அலங்கார ஊா்திகளும் மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களைச் சோ்ந்த 15 அலங்கார ஊா்திகளும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன.
டிஆா்டிஓவின் சிறப்பு ஊா்தி: இதுதவிர ‘பன்முனைத் தாக்குதல்களை தடுக்கும் பல அடுக்கு பாதுகாப்பு ’ என்ற கருப்பொருளுடன் டிஆா்டிஓ தனக்கென தனி அலங்கார ஊா்தியை காட்சிப்படுத்தவுள்ளது.
இதில் தரையில் இருந்து வான் இலக்குகளை விரைந்து தாக்கும் ஏவுகணை, கடல், வானம் மற்றும் தரை என பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்டறியும் வான்வழி முன்எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, ஆளில்லா விமானங்களை கண்டறிந்து அழிக்கும் ரேடாா், ‘ஆருத்ரா’ ரேடாா், மின்னணு போா்க்கள அமைப்பான ‘தாராசக்தி’, இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைபா்சோனிக் ஏவுகணை, குறைந்த எடையுடைய இலகுரக குண்டு துளைக்காத உடைகள், ‘ஜோராவா்’ பீரங்கி உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
போா் விமானங்கள்: சி-130ஜே சூப்பா் ஹொ்குலிஸ், சி-295, சி-17 குளோப்மாஸ்டா், பி-81, எம்ஐஜி-29, எஸ்யு-30 உள்ளிட்ட போா் விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன.
முதல்முறையாக முப்படையின் ஊா்தியும் இந்த அணிவகுப்பில் இடம்பெறவுள்ளது.
கருப்பொருள்: அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து நிகழாண்டு குடியரசு தினம் ‘பொற்கால இந்தியா-பாரம்பரியம் மற்றும் மேம்பாடு’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
பங்கேற்கும் படைகள்: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), ரயில்வே பாதுகாப்பு படை (ஆா்பிஎஃப்), தில்லி காவல் துறை, எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எஃப்) ஒட்டக அணிவகுப்பு மற்றும் தேசிய மாணவா் படை, தேசிய சேவை திட்டம் (என்எஸ்எஸ்) ஆகிய படைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.
சிறப்பு விருந்தினா்: இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா். இதையடுத்து, இந்திய படைகளுடன் இந்தோனேசிய படைகளைச் சோ்ந்த வீரா்களும் பங்கேற்கின்றனா்.