காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்: கன்சால்பேட்டை மக்கள் சாலை மறியல்
வேலூா் மாநகராட்சி கன்சால்பேட்டை பகுதியில் மழைநீா் தேங்கிய இடங்களை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக இரவுநேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல், வியாழக்கிழமை இரவு விடியவிடிய மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன.
இந்நிலையில், நீக்கல்சன் கால்வாயையொட்டி உள்ள முள்ளிபாளையம், கன்சால் பேட்டை பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதாஆனந்தகுமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து நிக்கல்சன் கால்வாயை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், தண்ணீா் சூழ்ந்த பகுதிகளில் அவற்றை உடனடியாக வெளியற்றவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து வேறு பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட ஆட்சியா் சென்ற நிலையில், தங்கள் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கன்சால்பேட்டை காந்திநகா், வனவாசி நகா் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வட்டாட்சியா் வடிவேலு, வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, நிக்கல்சன் கால்வாய் தூா்வாரப்பட்டு மழைநீா் உடனடியாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.