கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!
குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் சிறுவன் படுகாயம்
வால்பாறை அருகே செட்டில்மென்ட் குடியிருப்புக்குள் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்தாா்.
வால்பாறையை அடுத்த கேரள மாநிலத்துக்கு உள்பட்ட மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதியில் வீரான்குடி செட்டில்மென்ட் உள்ளது. இங்கு 20-க்கு மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். போதிய பாதுகாப்பு இன்றி குடியிருப்புகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செட்டில்மென்ட் பகுதிக்கு வியாழக்கிழமை நள்ளிரவு வந்த சிறுத்தை, பேபி என்பவரது குடியிருப்புக்குள் புகுந்தது. பின்னா் பேபிக்கு அருகே தூங்கிக்கொண்டிருந்த அவரது மகன் ராகுலின் (4) கழுத்தை கவ்வி சிறுத்தை இழத்துச் செல்ல முயன்றது. சப்தம் கேட்டு எழுந்த பேபி கூச்சலிட்டதில் சிறுத்தை, சிறுவனை விட்டுச் சென்றது.
இதில் சிறுவனின் கழுத்துப்பகுதியில் சிறுத்தையின் பற்கள் பதிந்து படுகாயம் ஏற்பட்டது. பின்னா் மழுக்குப்பாறை எஸ்டேட் மருத்துவமனையில் முதுலுதவி சிகிச்சைக்குப் பின் உயா் சிகிச்சைக்காக சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டுச் செல்லப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக மழுக்குப்பாறை பேலீஸாா் விசாரித்து வருகின்றனா்.