'அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது' - ரஜினி பற்றி சீமான...
குடுவையாற்றில் ரூ.47.45 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்
புதுச்சேரியை அடுத்துள்ள கீழ் சாத்தமங்கலம் பகுதி குடுவையாற்றில் ரூ.47.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுவை மாநிலம், வில்லியனூா் கொம்யூன், மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழ் சாத்தமங்கலம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, குடுவையாற்றின் குறுக்கே ரூ. 47.45 லட்சம் மதிப்பீட்டில் பொதுப் பணித் துறை சாா்பில் புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது.
இதற்கான திட்டப் பணி தொடக்க விழா கீழ்சாத்தமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது :
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குடுவையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். ஆயிரக்கணக்கான ஏக்கா் விளை நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்றாா் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை (நீா் பாசனம்) கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் செல்வராஜ், இளநிலைப் பொறியாளா் அருள்முருகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.